Friday, February 18, 2011

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்

அறிந்த விளக்கம்

மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம் சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்உபயோகிக்க வேண்டியிருக்கிறது ). பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம். படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம். பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து விடுவோம்.. ஆனால் இந்த பழமொழி வந்ததுக்கு மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம் கேள்விப்பட்டேன்

அறியாத விளக்கம்

புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள் எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசிகட்டமாக

அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள். அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல் வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன் இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து நிறைய பேரை அழித்து விடும் . இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர் பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என சொல்லிவைத்தார்கள் .

ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்

அறிந்த விளக்கம்

மேற் சொன்ன பழமொழியை நேரடியாக பொருள் கொண்டோமானால் கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை

மேற்கொள்ளும்போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்கமுடியாது . அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான் . இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் . இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

அறியாத விளக்கம்

மேலே சொன்ன பழமொழிக்கும் பலவிதமான அர்த்தங்கள் கொடுக்கலாம். ஆனால் அதிகம் பேரால் ஒத்துக் கொள்ளப்பட்ட

விளக்கமாய் அறிந்ததை தருகிறேன் . ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்

மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம், நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் பயக்கும் , ஆக அது மாதிரியான காரியங்களை தவிர்ப்பது நலம்.

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

அறிந்த விளக்கம்

ஒரேயொரு வார்த்தை மாறினால் எப்படி தம் வசதிப்படி பழமொழிக்கு விளக்கம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட பழமொழியும் ஒரு சான்று .சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது .

அறியாத விளக்கம்

நியாயமாய் இந்த பழமொழியின் வடிவம் குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்பட வேண்டும் என்று வர வேண்டும்.அதாவது தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான விளக்கம் . மோதுகிற என்ற சொல்ல காலச்சக்கரத்தில் மோதி மோதி மோதிர என்றாகி விட்டது போலும்.